search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்ட ஜெர்மனி மந்திரி
    X

    ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்ட ஜெர்மனி மந்திரி

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு உள்துறை மந்திரி தாமஸ் டி மைசியரே ஒப்பிட்டு பேசியுள்ளார்.
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து ஹம்பர்க் நகரில் ஒன்று கூடி,“வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து அனைத்து தலைவர்களுக்கும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன.

    பின்னர், கண்ணீர் புகை குண்டுகள் வீசி ஒரு வழியாக போராட்டத்தை கலவர தடுப்பு போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறைவான நபர்களே போராட்டம் நடத்தினர் என அரசு சமாளித்தாலும், சுமார் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அராஜகவாதிகள் என்று விமர்சித்துள்ள ஜெர்மனி உள்துறை மந்திரி தாமஸ் டி மைசியரே, ”நாஜி தீவிரவாதிகள் மற்றும் ஐ.எஸ் இயக்கத்தினருக்கு இணையான வன்முறையை போராட்டக்காரர்கள் நடத்தினர். கையில் கிடைத்தவர்களை கொலை செய்யும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர்” என்று காரசாரமான கருத்துக்களை கூறியுள்ளார்.
    Next Story
    ×