search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை அருகே ஐ.நா. வாகனத்தை தாக்கியதா இந்திய ராணுவம்? - பாக். குற்றச்சாட்டை நிராகரித்தது ஐ.நா.
    X

    எல்லை அருகே ஐ.நா. வாகனத்தை தாக்கியதா இந்திய ராணுவம்? - பாக். குற்றச்சாட்டை நிராகரித்தது ஐ.நா.

    எல்லைப்பகுதியில் ஐ.நா. வாகனத்தை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியதாக, பாகிஸ்தான் வெளியிட்ட தகவலுக்கு ஐ.நா. மறுப்பு தெரிவித்துள்ளது.
    நியூயார்க்:

    காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக சமீபத்தில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    இந்தியாவின் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகளையும் ராணுவம் வெளியிட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் இதை மறுத்துள்ளது.

    இந்நிலையில், எல்லைப்பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியிலிருந்த சர்வதேச ராணுவ பார்வையாளர்களின் வாகனத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் அதிகாரிகளுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளது.



    ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின் தகவலை ஐ.நா. மறுத்துள்ளது. எல்லைப்பகுதியில் தங்கள் ராணுவ பார்வையாளர்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியுள்ளார்.

    ‘பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில், பாகிஸ்தான் பாதுகாவலர்களுடன் ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் சென்றபோது துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டுள்ளனர். ஆனால், அது ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் குறிவைக்கப்பட்டதாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை’ என்றும் அவர் கூறினார்.

    எல்லைப்பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச ராணுவ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×