search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் 2 சீன மொழி ஆசிரியர்கள் கடத்தல்: போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கடத்தியதாக தகவல்
    X

    பாகிஸ்தானில் 2 சீன மொழி ஆசிரியர்கள் கடத்தல்: போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கடத்தியதாக தகவல்

    பாகிஸ்தானில் சீன மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இன்று இரண்டு சீன மொழி ஆசிரியர்கள் குவெட்டா நகரில் கடத்தப்பட்டுள்ளனர்.
    குவெட்டா:

    ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை ஆசியாவுடன் இணைக்கும் பட்டுப்பாதை திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வரும் சீன அரசு, அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சாலை, ரெயில் தண்டவாளம் மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனா 57 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் குவெட்டா நகரில் இன்று கடத்தப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் போன்று ஆயுதங்களுடன் வந்த நபர்கள், சீன மொழி ஆசிரியர்களை மிரட்டி கடத்திச் சென்றதாக பலுசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கடத்தப்பட்ட இருவரும் கணவன்-மனைவி ஆவர். கடத்தலை தடுத்த நபரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சீனாவின் திட்டங்களுக்கு பலுசிஸ்தானில் கடும் எதிர்ப்பு உள்ளது. எனவே, சீனா புதிதாக கட்டமைத்து வரும் துறைமுகம், சாலைப்பணிகள் நடைபெற உள்ள பலுசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சீன தூதர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கடத்தலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், பிணைத்தொகை அல்லது விளம்பரத்திற்காக வெளிநாட்டவர்களை உள்ளூர் தீவிரவாத கும்பல் இதற்கு முன்பு கடத்தியிருப்பதால், இதிலும் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    Next Story
    ×