search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்களை போராட தூண்டிவிடுகிறார்கள்: அமைச்சர் பேட்டி
    X

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்களை போராட தூண்டிவிடுகிறார்கள்: அமைச்சர் பேட்டி

    பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்களை சிலர் தூண்டிவிட்டு உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    தமிழக செய்தி, விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது ஆகும். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால் ரூ.1000 கோடி கடன் தொகை இருந்தது. அதன்பிறகு அந்த கடன் சுமை அதிகரித்தது.

    மேலும் கடந்த 6 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் வேறுவழி இல்லாமல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நமது மாநிலத்தில் பஸ் கட்டணம் குறைவாகவே உள்ளது.

    வாகனங்களுக்குக்கான உதிரி பாகங்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் மிகுந்த சிரமத்திற்கு இடையேதான் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவை தொகை கேட்டு போராட்டம் நடத்தினார்கள். எதிர்கட்சிகளும் அதில் பங்கேற்றனர். எனவே பிரச்சினையை சுமூகமாக முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. யாரும் பாதிக்காத வகையில் இந்த பிரச்சினை பேசி முடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்களை சிலர் தூண்டிவிட்டு உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். உண்மை தெரிந்தால் மாணவர்கள் போராடமாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் மாணவர் நலன் கருதி இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வந்தார். அந்த திட்டம் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற உண்மைகள் தெரியும்போது மாணவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள்.

    ரஜினி, கமல்ஹாசன் என்று யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆகிறது. அ.தி.மு.க. 30 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் உள்ளது.

    அ.தி.மு.க. மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக திகழ்ந்து வருகிறது. தற்போது எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறோம். தற்போது திரைப்பட துறையினர் மற்றும் யார் கட்சி தொடங்கினாலும் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையைதான் நினைவுபடுத்தும். அ.தி.மு.க.வுக்கு எதிராக கட்சி தொடங்குபவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

    தி.மு.க.வுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த யார் நெருக்கமாக உள்ளனர் என்பது பற்றி மக்களுக்கு தெரியும், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டுமென்று மக்கள் விரும்பி அவருக்கு ஓட்டுப்போட்டனர். அந்த ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன் சேர்ந்து சிலர் சதி செய்கிறார்கள். அவர்களை பற்றி மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. உடன் இருந்தார்.
    Next Story
    ×