search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலையில் சிக்கிய மீனவரின் உடலை படத்தில் காணலாம்.
    X
    வலையில் சிக்கிய மீனவரின் உடலை படத்தில் காணலாம்.

    மீன்பிடி வலையில் சிக்கிய மீனவர் பிணம் - டி.என்.ஏ. சோதனைக்கு ஏற்பாடு

    குளச்சல் மீனவர்கள் வலையில் சிக்கிய உடல் யாருடையது என்பதை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி வீசிய ஒக்கி புயலில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள்.

    இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஒக்கி புயலில் மாயமான குமரி மீனவர்கள் பலரது உடல்களும் கேரள கடல்பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. அவை அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே கரை ஒதுங்கிய உடல்கள் அனைத்தும் டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதுவரை குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 16 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் வழங்கினார்.

    இதற்கிடையே குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் விசைபடகுகளின் வலையிலும் கடலில் மாயமான மீனவர்கள் உடல்கள் சிக்கி வருகிறது.

    கடந்த வாரம் குளச்சலில் இருந்து சென்ற விசைபடகு மீனவர்களின் வலையில் ஒரு ஆண் பிணம் சிக்கியது. அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து இருந்ததால் அதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பத்திரமாக வைத்துள்ளனர். உடலை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நேற்றிரவும் ஒரு பிணம் குளச்சல் விசை படகு மீனவர்களின் வலையில் சிக்கி உள்ளது. இது பற்றி படகின் உரிமையாளர் ஜெயசீலன், விசை படகு உரிமையாளர் சங்க செயலாளர் பிராங்கிளினுக்கு தகவல் கொடுத்தார். அவர் கடலோர காவல்படையினரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து அந்த உடல் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குளச்சல் மீனவர்கள் வலையில் சிக்கிய உடல் ஒக்கி புயலில் மாயமான மீனவரா? என்பது பற்றி கடலோர காவல்படையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து கட்டு மரத்தில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. எனவே அவர்களில் ஒருவரின் உடலா? என்ற சந்தேகமும் அப்பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    எனவே மீட்கப்பட்ட உடல் யாருடையது என்பதை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #tamilnews



    Next Story
    ×