search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் டிராக்டர் ஓட்டி நெற்பயிர் சேதம்: டி.எஸ்.பி. மீது வழக்கு
    X

    ஆரணியில் டிராக்டர் ஓட்டி நெற்பயிர் சேதம்: டி.எஸ்.பி. மீது வழக்கு

    டிராக்டர் ஓட்டி நெற்பயிரை சேத படுத்திய வழக்கில் பெண் டி.எஸ்.பி. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது தம்பி தியாகராஜன். விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தின் பட்டா மற்றும் பத்திரம் தியாகராஜன் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் உள்ளதாகவும், இந்த நிலத்தில் அண்ணாமலையின் மகள் சாவித்திரி பயிரிட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலம் தொடர்பாக சாமுண்டீஸ்வரிக்கும், சாவித்திரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆரணி கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் பிரச்சினைக்குரிய விவசாய நிலத்திற்கு சாமுண்டீஸ்வரி சென்று உள்ளார். அப்போது அவருக்கும், சாவித்திரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரின் உத்தரவின் பேரில் டிராக்டர் மூலம் நெற்பயிரை சேதப்படுத்தியதாகவும், சாவித்திரியை போலீசார் விசாரணைக்காக ஆரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து கடந்த 28-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அவர், நெற்பயிரை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, மனித உரிமை ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

    இந்த சம்பவம் குறித்த விசாரணை நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது முதன்மை நீதிபதி மகிழேந்தி, இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சாவித்திரி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மகிழேந்தி நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    இந்த வழக்கில் 7 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தரப்பில் இருந்து அனைத்து வீடியோ ஆதாரங்களும், ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. அதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது. எனவே, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும், தனி மனிதனுக்கு தீங்கு விளைவித்த காரணத்தினாலும், மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போடுவதாகவும், கை, கால்களை உடைத்து விடுவதாக மிரட்டியதாலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி 166, 506 (1) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.

    மேலும் பயிரை சேதப்படுத்திய அதே ஊரை சேர்ந்த சதாசிவம் மீது தனிநபர் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும், பயிரை சேதப்படுத்தியதாகவும் இந்திய தண்டனை சட்டம் 426, 447 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுவதாலும், இதனை கருத்தில் கொண்டும், சாட்சியங்களை கலைக்க குற்ற முகாந்திரம் இருப்பதும் தெரியவந்துள்ளது.


    அதே பகுதியில் சாட்சிகள் பயமின்றி சுதந்திரமாக விவசாயம் செய்ய வேண்டி இருப்பதால் ஆரணி டி.எஸ்.பி. ஜெரினா பேகத்தை வேறு உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்ய வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதாவிற்கு பரிந்துரை செய்யப்படும்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி. ஜெரினாபேகம், டிராக்டர் டிரைவர் சதாசிவம் ஆகியோர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

    Next Story
    ×