search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேர் ஜெயிலில் அடைப்பு
    X

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேர் ஜெயிலில் அடைப்பு

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுத்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வருபவர்கள் திடீரென தற்கொலைக்கு முயன்று வருகிறார்கள். உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயல்வது, வி‌ஷம் குடிக்க முயல்வது, மேலும் கையை அறுப்பது போன்ற விபரீத சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது போன்ற சம்பவங்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தொடர்ந்து நடந்து வருவது வாடிக்கையாகியும் விட்டது.

    இதனால் மக்கள் குறை கேட்பு முகாமில் இப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது. இதையும் மீறி தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது. இப்படி தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும் எச்சரித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடந்த போது 4 பேர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

    ஈரோடு மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் மற்றும் அகில இந்திய மக்கள நலக்கழக தலை வர் டி.கே.பழனிசாமி ஆகியோர் அரசு பள்ளிகளில் கட்டணத்தை குறைக்க கோரி மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது அவர்கள் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) என்ற வாலிபர் தனது வீட்டு மனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரி தனது கையை கத்திரிகோலால் வெட்டிஅறுத்து கொண்டு வந்தார்.

    தற்கொலை மிரட்டல் விடுத்த இவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டையை சேர்ந்த சங்கர் (35) என்பவர் வீட்டு மனை பட்டா கேட்டு உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இப்படி ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×