search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காள் கொலை: வாலிபர் வெறிச்செயல்
    X

    காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காள் கொலை: வாலிபர் வெறிச்செயல்

    சோளிங்கர் அருகே காதலியை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்ததை தட்டிக்கேட்ட அக்காள் வெட்டி கொலை செய்யபட்டார். அண்ணன், அண்ணியையும் வாலிபர் வெட்டினார்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் சேட்டு (வயது 30), நவீன் (25), மகள் அமுதா (28). சேட்டு அவரது மனைவி சகுந்தலாவுடன் தனியாக வசித்து வருகிறார். அமுதா திருமணமாகி காரையில் வசித்து வருகிறார். சுப்பிரமணி இறந்து விட்டதால் தாய் சாந்தியுடன் நவீன் வசித்து வந்தார். மேஸ்திரி வேலைக்கு சென்று வந்தார்.

    நவீன் அம்மூரை சேர்ந்த வைத்தீஸ்வரி (18) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு நேற்று மாலை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த நவீனின் அண்ணன் சேட்டு, அண்ணி சகுந்தலா, தாயார் சாந்தி ஆகியோர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதல் மனைவியை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறினர்.

    இதனையடுத்து நவீன் வைத்தீஸ்வரியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டில் விட்டு வந்தார். இதற்கிடையே நவீன் காதல் திருமணம் குறித்து காரையில் உள்ள அவரது அக்காள் அமுதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக புறப்பட்டு வந்தார்.

    காதல் மனைவியை பிரிந்து நவீன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது அண்ணன் சேட்டு, அக்காள் அமுதா ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நவீன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சேட்டு, சகுந்தலா, அமுதா ஆகியோரை வெட்டி சாய்த்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரது அக்கா அமுதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பயந்துபோன நவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த சேட்டு, சகுந்தலா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர்.

    தகவல் அறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம், சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசா£ர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தப்பிஓடிய நவீனை பிடிக்க டி.எஸ்.பி. குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் காண்டீபன், மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நவீனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×