search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே போலீஸ் போல் நடித்து வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் கொள்ளை
    X

    விக்கிரவாண்டி அருகே போலீஸ் போல் நடித்து வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

    விக்கிரவாண்டி சோதனைசாவடி அருகே போலீஸ்போல் நடித்து வாலிபர்களிடம் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை, முகமது காசிம் உள்பட 5 பேர் நேற்று இரவு ஒரு காரில் சென்னையில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர். அப்போது அவர்கள் பையில் ரூ.10 லட்சம் வைத்திருந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சோதனைசாவடி அருகே வந்தது. அப்போது சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு 3 வாலிபர்கள் கீழே இறங்கி சிறுநீர் கழிக்க சென்றனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது.

    அந்த காரில் 3 பேர் இருந்தனர். அவர்கள் போலீஸ் உடை அணிந்திருந்தனர். சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சின்னதுரையின் காரின் அருகே சென்றனர். அங்கிருந்த சின்னதுரை, முகமது காசிம் ஆகியோரிடம் போலீஸ் போல் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த பணப்பையை பறித்தனர். உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி 2 பேரையும் தாங்கள் வந்த காரில் ஏற்றி சென்றனர்.

    அந்த கார் திருநாவலூர் கெடிலம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது காரில் இருந்தவர்கள் திடீரென்று சின்னதுரையையும், முகமது காசியையும் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    போலீஸ்போல் நடித்து தங்களிடம் பணம் பறித்த சம்பவத்தை அறிந்து அவர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    போலீஸ்போல் நடித்து வாலிபர்களிடம் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×