search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்த 11 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
    X

    நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்த 11 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

    திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து அதிவேகமாக வந்த வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் நிறுத்தி ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தார்.
    மணப்பாறை:

    திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை இரவு பேர்வெல் லாரியின் பின் பகுதியில் சுற்றுலா பயணிகள் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் விபத்திற்கான காரணத்தை கண்டறிந்திட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி முதலில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்கின்றது என்பதை கண்டறிய நேற்று மாலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை அருகே அதிவேக அளவீட்டு கருவி மூலம் சோதனை செய்தனர்.

    மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரி தலைமையில் பறக்கும் படையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினருடன் சேர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 100 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் 115 முதல் 160 கி.மீ வேகத்திலும், 80 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் செல்வது கண்டயறிப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் படியும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரி முடிவு செய்தார். அதன்படி அதிவேக அளவீட்டு கருவி மூலம் அதிவேகமாக வரும் வாகனங்களை குறிப்பிட்ட தொலைவில் படம் பிடித்து அந்த வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்த பின் அந்த வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுனர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஆய்வில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்த 11 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதே போல் துவரங்குறிச்சி அருகே உள்ள சில கிராமங்களுக்கு சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் ஹெல்மெட் அணியாமல் சென்ற 10 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், சென்னை போக்குவரத்து ஆணையரின் ஆலோசனைப்படி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அந்த ஓட்டுனர் உரிமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணி தொடரும் என்றும் அதற்காக தொடர்ந்து அவ்வபோது ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே சரியான வேகத்தில் போக்குவரத்து விதிமுறை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மகிழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×