search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தொழில்அதிபரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
    X

    சென்னை தொழில்அதிபரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

    ரூ.4½ லட்சத்தை திருப்பி கேட்ட சென்னை தொழில்அதிபரை கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    சென்னை அய்யபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக் குமார்(வயது 40). கட்டிட உள் அலங்கார தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவை காளப்பட்டியில் நிறுவனம் நடத்தி வரும் உஜில்சிங் என்ற சந்திரன்(42) என்பவரிடம் எந்திரம் கேட்டு ஆர்டர் கொடுத்தார். இதற்காக சிவக்குமார் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.4½ லட்சத்தை சந்திரனிடம் கொடுத்தார். மாதங்கள் பல கடந்த பிறகும் சந்திரன் எந்திரத்தை அனுப்பவில்லை.

    இதனால் ஏமாற்றமடைந்த சிவக்குமார் நான் கொடுத்த பணத்தையாவது திருப்பி தந்து விடுங்கள் என கேட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் எந்திரத்தை அனுப்பி விடுகிறேன் என சந்திரன் சமாளித்து வந்தார். அதன் பிறகு பல நாட்களாகியும் எந்திரம் அனுப்பாததால் சந்தேகமடைந்த சிவக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை வந்தார்.

    நீங்கள் எந்திரத்தை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை, நான் கொடுத்த ரூ.4½ லட்சத்தை திருப்பி தந்து விடுங்கள், அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி சந்திரனின் நிறுவனத்திலேயே தங்கினார். இதனால் சந்திரன் திகைத்து போனார். நேற்று பணத்தை தந்து விடுகிறேன், என்னுடன் வாருங்கள் என சிவக்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு தொட்டிபாளையம் சாலையில் சென்றார்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் கை, மார்பு என பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் சிவக்குமார் அலறித்துடித்தார். அப்போது சந்திரன் கத்தியால் சிவக்குமாரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்ட சிவக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி ரோட்டுக்கு வந்தார்.

    சாலையில் சென்றவர்கள், சிவக்குமார் ரத்தக்காயத்துடன் ஓடி வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து சிவக்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்திரன் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×