search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா வீட்டில் இருந்து எடுத்தது பழைய லேப்டாப்: டி.டி.வி.தினகரன்
    X

    ஜெயலலிதா வீட்டில் இருந்து எடுத்தது பழைய லேப்டாப்: டி.டி.வி.தினகரன்

    வருமான வரி சோதனையின் போது ஜெயலலிதா வீட்டில் இருந்து எடுத்தது பழைய லேப்டாப் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
    ஆலந்தூர்:

    அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை தேர்தலின் போது பொதுச்செயலாளரும், ஆட்சி மன்ற குழுவும் என்னை போட்டியிட முடிவு செய்தது. தற்போது யார் போட்டியிட வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்வார்.

    இரட்டை இலையுடன் போட்டியிடுவோம் என்ற தனது ஆசையை தம்பிதுரை சொல்லி இருப்பார். இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். நிச்சயமாக எங்களுக்குதான் கிடைக்கும்.

    ஜெயலலிதாவின் ஆண்டு திதி நாளைக்கு (அதாவது இன்று) வருகிறது. ஒவ்வொரு மாதமும் அர்ச்சகர்கள் போயஸ் கார்டன் சென்று திதி தந்தார்கள். ஒரு ஆண்டு முடியும் நிலையில் முக்கிய திதியாகும். ஜெயலலிதா குடும்ப வழக்கப்படியே 3 ஆண்டுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய சென்றார்கள். காவல்துறையினர் சாஸ்திரிகளை உள்ளே செல்லவிடாமல் அப்புறப்படுத்தி உள்ளார்கள்.

    ஒருவருட திதி என்பது இந்து மதத்தில் முக்கியமானது. இதை தடுக்கின்ற வகையில் செயல்பட்டு உள்ளனர்.

    போயஸ் கார்டன் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த பணியாளர்கள்தான் இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் சசிகலா வெளியே வந்த பின்னர் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். கோர்ட்டில் வருமான வரி சோதனை என்றதும் உண்மையில் போயஸ் கார்டனில் தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை.

    அங்கு சோதனை நடத்தும் போது அங்கு வந்து நின்று இருக்கலாம். இப்போது உண்மை நிலை தொண்டர்களுக்கு தெரிந்துவிட்டது.

    போயஸ் கார்டனில் இருந்து பழைய லேப்டாப் மற்றும் பென்டிரைவ்களை எடுத்து சென்று உள்ளனர். வேறு எதுவும் கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×