search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்
    X

    தூத்துக்குடியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற உள்ளது. விழாவில் ரூ.544.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
    தூத்துக்குடி:

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடிட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் தொடக்கவிழா கடந்த 30.06.2017 அன்று மதுரையில் நடைபெற்றது.

    25-வது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவிற்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமை வகிக்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் உருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ. 380.94 கோடி மதிப்பிலான 214 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.8.08 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 31 ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு ரூ. 155.12 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

    மொத்தம் ரூ. 544.14 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக விழா நடக்கும் பந்தலில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் மற்றும் அப்பகுதிகளை சுற்றிலும் ஏராளமான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    அவசரகால மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    முதல்வர், துணைமுதல்வர் விமானத்தில் வருவதால் வாகைக்குளம் விமான நிலைய பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல், முதல்வர் வந்து செல்லும் வழித்தடம் அனைத்திலும் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    முதல்வர், துணை முதல்வர் வந்து செல்லும் வழித்தடங்கள் முழுவதையும் போலீசார் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    Next Story
    ×