search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே நாய் கடித்து கல்லூரி விரிவுரையாளர் பலி
    X

    திருச்சி அருகே நாய் கடித்து கல்லூரி விரிவுரையாளர் பலி

    திருச்சி அருகே நாய் கடித்ததில் கல்லூரி விரிவுரையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செவலூர் திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் குகன்ராஜ்(வயது 29). இவர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற நாய் குகன்ராஜை கடித்தது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு சென்று தன் பணியை தொடர்ந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குகன்ராஜூக்கு காய்ச்சல் ஏற்படவே, மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார்.

    கல்லூரியில் இருந்த குகன்ராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே கல்லூரியில் உள்ளவர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குகன்ராஜ் யாரையும் அருகில் வரவிடாமல் திடீரென ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டார். அவரை கட்டுப்படுத்த முடியாத அளவில் அவரின் ஆக்ரோ‌ஷம் இருந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குகன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பில் குகன்ராஜ் இறந்ததால் மருத்துவமனையில் இருந்து அவரின் உடலை கொடுக்கப்படவில்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    இருப்பினும் இறந்தவரின் உடல் அருகில் யாரையும் மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு குகன்ராஜின் உடலை மருத்துவமனை பணியாளர்களே எடுத்துச் சென்று தகனம் செய்தனர். மேலும் நாய் கடித்ததால் குகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

    மணப்பாறை செவலூர் பகுதியில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரியும் நிலையில் பலரும் இதுபோன்று நாய்க்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் குகன்ராஜ் உயிரிழந்துள்ளார். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்காவிடில் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×