search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணை தண்ணீர் ஊற்றி போலீசார் காப்பாற்றிய காட்சி.
    X
    தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணை தண்ணீர் ஊற்றி போலீசார் காப்பாற்றிய காட்சி.

    வேலை கிடைக்காத விரக்தி: கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி

    தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுல்தானியா தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ரகிமுன்னிஷா (வயது 26). கலப்புத்திருமணம் செய்த இவர்களுக்கு 3 வயதில் கதிஜா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை உள்ளது என்ற அரசாணை படி ரகிமுன்னிஷா சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற நேர்காணலிலும் அவர் கலந்துகொண்டார்.

    தற்போது தகுதியானவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் ரகிமுன்னிஷாவுக்கு கடிதம் வரவில்லை. இதனால் ரகிமுன்னிஷா தாராபுரம் நகராட்சி அலுவலகம் சென்று, அதிகாரிகளை சந்தித்து அழைப்பு கடிதம் வராதது குறித்து விவரம் கேட்டுள்ளார்.

    அதற்கு அதிகாரிகள், கலெக்டர் அலுவலகம் சென்று விசாரிக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு ரகிமுன்னிஷா சென்று விவரம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ரகிமுன்னிஷாவிடம் கலப்பு திருமணம் செய்ததற்கான விவரங்களை நகராட்சி அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்றும் அதற்கான காரணத்தை நகராட்சி அலுவலகத்தில் விசாரித்துப்பாருங்கள் என்றும் கூறியுள்ளனர்.

    அதன் பிறகு அவர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது அதிகாரிகள் உரிய பதிலை அளிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த ரகிமுன்னிஷா தனது மகள் கதிஷாவுடன் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்து வேலை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் ரகிமுன்னிஷா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதை பார்த்த போலீசார் ஓடிச்சென்று ரகிமுன்னிஷா மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.

    இந்த சம்பவம் குறித்து ரகிமுன்னிஷா கூறியதாவது:-

    கலப்பு திருமணம் செய்த ஆவணங்களோடு சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்தேன். ரூ.1½ லட்சம் பணம் கேட்டனர். நான் ரூ.50 ஆயிரம் கொடுத்தேன். மீதி ரூ.1 லட்சம் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் எனது ஆவணங்களை மறைத்து எனக்கு வேலை கிடைக்காதபடி செய்து விட்டார்கள். இதற்கு நியாயம் கேட்டு போராடியதற்கு என்னை தரக்குறைவாக பேசி மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×