search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
    X

    கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

    கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும், ஐகோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பதாகை வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.



    அரசியல் கட்சிகள் அமைக்கும் கட்-அவுட்களால் மக்களுக்கு இடையூறு மட்டுமே ஏற்படும் நிலையில், நடிகர்களுக்காக அமைக்கப்படும் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யும் போது அப்பாவி ரசிகர்கள் தவறி விழுந்து இறக்கும் நிகழ்வுகளும், காயமடையும் நிகழ்வுகளும் நடப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

    இந்த அபத்தங்களுக்கும், கொடுமைகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவு கட்டும் என்பதால் அத்தீர்ப்பை எத்தனை முறை வேண்டுமானாலும் வரவேற்று பாராட்டலாம். இந்த நிலையை மாற்றுவதுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.



    பா.ம.க. நிகழ்ச்சிகளில் கட்-அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வக்கோளாறு காரணமாக இந்தத் தடையை மீறிய பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடப்பட்ட வரலாறும் உண்டு. உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பதாகை வைக்கக்கூடாது என்ற தடையை விரிவாக்கி யாருக்கும் கட்-அவுட், பதாகை அமைக்கக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டால் அது முழுமையானதாக இருக்கும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட விபரீத செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, இத்தீர்ப்பை உறுதியாக செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இத்தடையை விரிவாக்கி கட்-அவுட் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×