search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரணாம்பட்டு, காவேரிப்பாக்கம், ஆற்காட்டில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    பேரணாம்பட்டு, காவேரிப்பாக்கம், ஆற்காட்டில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    காவேரிப்பாக்கம், ஆற்காடு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பாலாற்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. காவேரிப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 97.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ராணிப்பேட்டை நகராட்சி 10-வது வார்டு பகுதியான சீனிவாசன்பேட்டை பகுதியில் அம்பேத்கர் புதிய தெரு மற்றும் குவார்ட்டர்ஸ் தெரு பகுதிகளில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் வீட்டின் சுவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் காமராஜர் தெருவில் உள்ள வேலு, பள்ளிக்கூட தெரு பகுதியில் வசிக்கும் ரத்தினம்மாள் (வயது 55) ஆகியோர் வீடுகளின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் உள்ள பொருள்கள் சேதமடைந்தது. யாரும் காயம் அடையவில்லை.

    இந்த பகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியிலும் வெள்ளநீர் புகுந்ததால் சுமார் 50 வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. குவார்ட்டர்ஸ் தெரு பகுதியில் வெள்ளநீர் தெருக்களில் தேங்கியுள்ளதால் இந்த பகுதியில் உள்ள தெரு குழாய்களும் தண்ணீரில் மூழ்கின. மேலும் இந்த குடியிருப்புகளுக்கு அருகில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இதே பகுதியில் உள்ள கால்வாயில் மழைக்காலங்களில் விடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வருகிறது.

    இதனால் பல்வேறு நோய்கள் இந்த பகுதி மக்களை தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் உடனடியாக இந்த பகுதியில் முகாமிட்டு இப்பகுதி பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மருந்துகளை கொடுத்து பொதுமக்களை நோயிலிருந்து காக்க வேண்டும் என்பது இந்த பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ஆற்காட்டில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் ஆற்காடு பகுதிகளில் பலத்தமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளிகளின் அருகே சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    பேரணாம்பட்டு அருகே ரங்கம்பேட்டையொட்டி அமைந்துள்ள ஆந்திர வனப்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் நேற்று மாலை திடீரென ரங்கம்பேட்டை வனப்பகுதி கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கானாற்றின் கரைகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஏரிக்குத்திமேடு, தாஹீர்வீதி, நல்ல தண்ணீர் கிணறு வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்தது.

    மேலும் ஏரிக்குத்திமேடு செல்லும் வழியில் வரும் கானாறு தரைப்பாலத்தின் 3 கண்களும் அடைப்பு ஏற்பட்டதால் ஏரிக்குத்திமேட்டிற்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

    இதனால் அப்பகுதி இளைஞர்கள் கயிறுகள், கட்டைகளை கொண்டு மாணவ- மாணவிகளையும், பொதுமக்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
    Next Story
    ×