search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தலைவர்கள் கண்டனம்
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தலைவர்கள் கண்டனம்

    18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் யார்? கட்சியை குழு நடத்துகிறதா? இதற்கு முன்பு நடந்த பொதுக்குழு, இப்போது நடந்த பொதுக்குழு, இது தொடர்பான வழக்கு, ஏற்கனவே தேர்தல் கமி‌ஷனில் உள்ள வழக்கு, கட்சிக்கு பொதுச்செயலாளர் யார்? ஏற்கனவே உள்ள பொதுச்செயலாளரின் நியமனம் செல்லுமா? செல்லாதா? அல்லது இப்போது உள்ள ஒருங்கிணைப்பு குழு தான் கட்சியை நடத்துமா? கட்சியை நடத்தக்கூடிய தலைமை நிர்வாகி யார் என்பதை தேர்தல் கமி‌ஷன் இன்னும் முடிவு செய்யவில்லை.

    சட்டமன்றத்துக்கு உள்ளே நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏ.க் களுக்கு கொறடா உத்தரவு போட்டு மீறாத ஒரு சூழ் நிலையில், வெளியே நடை பெற்றிருக்கிற சம்பவங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய முடியாது. இதில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றம் போகிறார்களா? என்பது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அப்படி அவர்கள் முடிவெடுத்து நீதிமன்றம் சென்றால் நீதி மன்றத்தில் இதற்கான நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    இப்போதைய அரசாங்கம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இது போன்ற தந்திரமான வேலையை செய்திருக்கிறது. இது சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதுதான் எனது கேள்வியாகும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் எந்த கட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பது முடிவாகவில்லையே. தீபா, தினகரன் எல்லோருமே நாங்கள்தான் கட்சி என்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இணைந்து நாங்கள் இருவரும்தான் கட்சி என்கிறார்கள். தேர்தல் கமி‌ஷனோ, கோர்ட்டோ முடிவு செய்வதற்கு முன்பே கட்சி தாவல் சட்டம் எங்கிருந்து வந்தது. அப்படி இருக்கும்போது சபாநாயகர் எப்படி அவர்களை நீக்க முடியும். இது நீதி மன்றத்தில் நிற்காது.

    கட்சி மாறினால் 10-வது அட்டவணையின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டம் இருக்கலாம். அந்த சட்டம் இவர்களுக்கு பொருந்துமா? என்பதுதான் கேள்வி. அ.தி.மு.க. என்பது ஒரு கட்சியாக இருக்கிறதா? அல்லது 2 கட்சியாக ஆகி விட்டதா? ஒரு அ.தி.மு.க.வில் இருந்து ஏ.பி.சி. என மற்ற அ.தி.மு.க.வுக்கு தாவிச் சென்றிருக்கிறார்களா என்பதற்கெல்லாம் விளக்கம் வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன்:-

    பேரவை தலைவர் எடுத்துள்ள நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது. 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்தார்கள். அந்த கடிதத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் அரசை தக்க வைப்பதற்காக இந்த ஜனநாயக படுகொலையை செய்துள்ளார்.

    எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உரிமை உண்டு. நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் கவர்னரின் முடிவுக்கு உட்பட்டது.

    கொறடா உத்தரவு என்பது சபைக்கு வெளியே பொருந்தாது. கொறடா உத்தரவை மீறியதற்காக இந்த நடவடிக்கை என்றால் கடந்த பிப்ரவரி 18-ந்தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. வெளியேற்றப்பட்டது. மற்ற கட்சிகளும் வெளிநடப்பு செய்து விட்டன.

    ஆளும் கட்சியினர் மட்டும் இருந்தனர். அவர்களில் 11 பேர் (ஓ.பி.எஸ். அணி) கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள். சபாநாயகர் கூற்றுப்படி பார்த்தால் முதலில் அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்து இருக்க வேண்டும்.

    இங்கு அறுதிப்பெரும் பான்மை இல்லாத மைனாரிட்டி அரசு இருக்கிறது என்பது பிரதமர், உள்துறை மந்திரி, கவர்னர் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும் ஆட்சியை தக்க வைக்க சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    ஆளும் கட்சியின் அ.தி.மு.க. உட்பூசல் அதி உச்சத்தை தொட்டு இருக்கிறது. டி.டி. வி.தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பேரவை தலைவர் தகுதி நீக்கம் செய்திருக்கிறார்.

    இது முற்றிலும் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும், புறம்பானதாகும். தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களை அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்றே அறிவித்துள்ளனர். அ.தி.மு.க.வை விட்டு அவர்கள் வெளியேறவும் இல்லை. வேறு கட்சிக்கு தாவவும் இல்லை.

    இந்நிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு இருப்பதாக அறிவித்து இருப்பது பொருத்தமாக இல்லை. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடத்தும் நாடகமே இது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் நீதிமன்றத்தை நாடினால் இந்த நடவடிக்கை செல்லாததாக அறிவிக்கப்படும் என்று தெரிந்தே சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

    தி.மு.க. தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 20-ந்தேதிக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்ப்பு அளிக்கப்படலாம்.

    அந்த சூழலில் ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக இந்த நடவடிக்கையை மேற்கெண்டு இருப்பதாக தெரிகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் என சுட்டிகாட்டுகிறது.

    மார்க்சிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-

    எம்.எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது சரியான நடைமுறைல்ல. கவர்னரை சந்தித்து நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வலியுறுத்தினோம். அதனை கவர்னர் உடனடியாக நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறார்.

    பா.ஜனதா அரசு என்ன நினைக்கிறதோ அதனை அமலாக்க வேண்டும் என்று கவர்னர் முடிவு செய்கிறார். பா.ஜனதா நோக்கத்தை கவர்னர் செயல் படுத்துகிறார். கவர்னர் சுயமாக செயல்படவில்லை. கவர்னர் பா.ஜ.க.வின் தலைவராக இருந்துள்ளார். அதனால் அக்கட்சியின்படி தான் அவர் செயல்படுவார்.

    கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 18 எம்.எல். ஏ.க்களும் பதவியை இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஐகோர்ட்டை அணுகி இருக்கிறார்கள். நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இத்தகைய அசாதாரண அரசியல் சூழலில் தமிழகத்திற்கு முழு நேர கவர்னர் தேவை.

    Next Story
    ×