search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் 6-வது நாள் உண்ணாவிரதம்: முருகனுக்கு மருத்துவ பரிசோதனை
    X

    வேலூர் ஜெயிலில் 6-வது நாள் உண்ணாவிரதம்: முருகனுக்கு மருத்துவ பரிசோதனை

    வேலூர் ஜெயிலில் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி முருகன் ஜெயிலில் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 18-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் முதல் மவுன விரதத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார். சிறைத்துறை அதிகாரிகள் முருகனிடம் ஜீவசமாதி அடையும் முடிவை கைவிட்டு, உணவு அருந்தும்படி கூறினார்கள். ஆனால் அதனை முருகன் ஏற்க மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகனுக்கு சிறையில் கைதிகள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் நேற்று முன்தினம் முதல் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் முருகனை நேற்று அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்தார்.

    முருகன் ஜெயிலில் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் வழியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை வக்கீல் புகழேந்தி காண்பித்தார்.

    அதில் கடந்த 18-ந் தேதி முதல் அனைத்து உணவினையும் நிறுத்தி கிருஷ்ணரின் பாதங்களில் பற்றிக் கொள்ளும் ஜீவசமாதி நிலைக்கான பயணத்தினை நோக்கி போகிறேன். எனது இந்த உறுதியான பயணத்திற்கு யாரும் எவ்வித இடையூறும் செய்திடாதபடிக்கு தகுந்த அனுமதியும், ஆணையும் அல்லது பரிந்துரையும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    முருகன் இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மற்றும் மவுனவிரதம் மேற்கொண்டு வருகிறார். 3 வேலை தண்ணீர் மட்டும் குடிக்கிறார்.

    அவரது அறைக்கு முன்பு 24 மணி நேரம் சிறைக்காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்படுகிறார். முருகன் உடல் சோர்வடைந்து வருகிறது.

    காலை, மதியம், இரவு 3 வேளைகளிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. முருகன் உடல்நிலை மோசமானால் அவருக்கு கட்டாய உணவு, மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படும் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×