search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சையின்போது உறவினர் மரணம்: தனியார் ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க. எம்.பி. போராட்டம்
    X

    சிகிச்சையின்போது உறவினர் மரணம்: தனியார் ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க. எம்.பி. போராட்டம்

    கோவையில் தவறான சிகிச்சையால் உறவினர் இறந்ததால், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. டாக்டர்களை கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரபைபை ஏற்படுத்தியது.
    கோவை:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் பி.ஆர்.சுந்தரம். இவரது அண்ணன் கணபதியின் மகன் ரவிச்சந்திரன் (வயது 48). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன், ஒரு விபத்தில் காயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.

    இந்த நிலையில் தோள் பட்டையில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற கோவையில் உள்ள ‘ஆர்த்தோ ஓன்’ என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக இருந்தது.

    இதற்கிடையே ரவிச்சந்திரன், இறந்து விட்டதாக டாக்டர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரவிச்சந்திரனுக்கு ஆபரேசனுக்கு முன்பு அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியதால் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. எம்.பி. பி.ஆர்.சுந்தரம், கோவை தனியார் ஆஸ்பத் திரிக்கு விரைந்து வந்தார். அவர் டாக்டர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது அண்ணன் மகன் ரவிச்சந்திரனுக்கு விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு ரவிச்சந்திரனுக்கு தோள் பகுதியில் சவ்வு விலகல் பிரச்சினையால் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அதே தனியார் ஆஸ்பத்திரியில் ரவிச்சந்திரன் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அப்போது ரவிச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நாங்கள் எப்படி இறந்தார் என்று கேட்ட போது, மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரவிச்சந்திரனுக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதில்லை. அவருக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் இறந்து விட்டதாக நாங்கள் கருதுகிறோம்.

    எனவே அவரது உடலை டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது அரசு டாக்டர்களை கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைதொடர்ந்து பி.ஆர்.சுந்தரம் எம்.பி. டாக்டர்களை கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

    இதைதொடர்ந்து ரவிச்சந்திரனின் மனைவி புஷ்பம் இந்த சம்பவம் பற்றி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரவிச்சந்திரன் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×