search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தனூர் அணையை படத்தில் காணலாம்.
    X
    சாத்தனூர் அணையை படத்தில் காணலாம்.

    பரவலாக மழை பெய்தும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து இல்லை - விவசாயிகள் கவலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையும் குறிப்பிடத்தக்கதாகும். தண்டராம்பட்டு ஒன்றியத்தில் அமைந்துள்ள இந்த அணை 119 அடி உயரமும், 4 ஆயிரத்து 500 மீட்டர் நீளமும் கொண்டதாகும்.

    கல்வராயன் மலை தொடரில் மழை பெய்யும்போது வரும் நீரும், தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரும் இந்த அணையின் முக்கிய நீராதாரமாகும். குறிப்பாக கிருஷ்ணகிரி அணை நிரம்பி, அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தான் சாத்தனூர் அணை நிரம்புவதற்கு ஆதாரமாக உள்ளது.

    இந்த அணைமூலம் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் விவசாய பாசனத்திற்கு ஆண்டுதோறும் இருமுறை தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு 90-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளும் அதை ஒட்டி உள்ள சிறிய ஏரிகளும் நீர் ஆதாரத்தை பெறுகிறது. அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மற்றும் பல்வேறு கிராம பகுதிகள் குடிநீருக்கு சாத்தனூர் அணை நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சாத்தனூர் அணை நிரம்பவில்லை. இதன்காரணமாக விவசாய பாசனத்திற்கும் போதிய தண்ணீரை திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது அணையில் 72.45 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது. அதாவது 989 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் குப்பநத்தம் அணைக்கு 54 கன அடி நீர் வரும் நிலையில் அணை நீர்மட்டம் 33.78 அடியாகவும், போளூர் அருகே உள்ள செண்பகதோப்பு அணைக்கு நீர் வரத்து 51.796 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 29.8 அடியாகவும் உள்ளது.

    ஆனால் மிகப்பெரிய அணையான சாத்தனூர் அணைக்கு ஒரு கன அடி நீர் வரத்துக்கூட வரவில்லை. கடந்த ஆண்டும் அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் இந்த ஆண்டும் இதுவரை அணைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரி நீர் எப்போது வரும், கல்வராயன் மலைப்பகுதியில் மழை வெள்ளம் எப்போது வரும், இந்த ஆண்டு சாத்தனூர் அணை நிரம்புமா? என ஆவலோடு விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.




    Next Story
    ×