search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உள்ளார்: மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு
    X

    அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உள்ளார்: மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு

    தினமும் பத்திரிகையாளர்கள், ஊடகங்களை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியை போலவே அ.தி.மு.க. அரசு மீது குறை கூறி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    பீளமேடு:

    ஊட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கோவைக்கு இன்று வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் கடந்த வாரம் அனைத்து மாநிலங்களின் சார்பில் கூட்டுறவு வங்கிகளின் கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வருமான வரி செலுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனால் கூட்டுறவு துறை அமைச்சர் என்ற முறையில் நான் பெருமிதம் அடைகிறேன்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து கிடந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. பல தடைகளை தாண்டி உள்ளது. விரைவில் இரு அணிகளும் இணைந்து செயல்படுவோம்.

    கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் கோபி, சிவகாசி ஆகிய தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது எதிர்கட்சிகள் அ.தி.மு.க. அழிந்து போகும் என்று ஏளனம் பேசினர். ஆனால் தடைகளை தாண்டி அ.தி.மு.க. இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    டி.டி.வி.தினகரன் சார்பில் மதுரை மேலூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. முதல்-அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சரிகளிடம் கலந்து பேசி ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

    தினகரன் மட்டுமல்ல, யார் ஆட்சியை குறை கூறினாலும் அந்த குறைகளை நீக்கி சிறப்பான ஆட்சியை கொடுப்போம்.

    அ.தி.மு.க. தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது. அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தொண்டன் கூட மாற்றுக்கட்சிக்கோ, தி.மு.க.வுக்கோ இதுவரை செல்லவில்லை. இதிலிருந்து ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    மு.க.ஸ்டாலின் தினமும் பத்திரிகையாளர்கள், ஊடகங்களை சந்தித்து வருகிறார். அவரது தந்தை கருணாநிதியை போலவே அ.தி.மு.க. அரசு மீது குறை கூறி வருகிறார். இதை நாங்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    கமல் ஒரு நல்ல நடிகர். அனைவருக்கும் பொதுவானவர். அவர் தற்போது வழிதவறி சென்றுள்ளார். இதை விரைவில் அவர் உணருவார்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    Next Story
    ×