search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்: கிரண்பேடி விளக்கம்
    X

    புதுவை வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்: கிரண்பேடி விளக்கம்

    கடமையில் இருந்து தவற மாட்டேன், புதுவை வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன் என்று கவர்னர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை துறைமுகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர புதுவை அரசு முயற்சித்து வருகிறது. இந்த துறைமுகத்துக்கு கப்பலில் சரக்குகளை கொண்டு வந்து இறக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    ஆனால், இந்த திட்டம் சரியானது அல்ல என்று கவர்னர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கவர்னர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். மேலும் கவர்னர் புதுவை மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் கூறினார்கள்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி இணையதளம் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தற்காலிக நபராக இருக்கலாம். ஆனால், புதுவை நிரந்தரமானது. நான் எனது கடமையை தொடர்ந்து செய்வேன்.

    நான் கவர்னராக பதவி ஏற்ற போதே புதுவை வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறி இருந்தேன். எனது பொறுப்பை நான் செய்வேன். அதே நேரத்தில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்வது எனது கடமை.

    ஒரு திட்டத்தில் அதன் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல் என அத்தனையையும் அலசி பார்க்க வேண்டும். அதைத்தான் துறைமுக துறையிலும் செய்தோம். ஆனால், அதில் உரிய மாற்றம் ஏற்படவில்லை.

    இந்த மாநிலத்தின் நிர்வாகி என்ற முறையில் சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறாமல் பணிகள் நடப்பதை கண்காணிப்பது எனது கடமை. புதுவை மக்கள், அரசு, மத்திய அரசு, பத்திரிகைகள் மற்றும் அனைத்து தரப்பினரும் எனது கவனத்துக்கு கொண்டு வருவதை நான் கவனித்து பணியாற்றுகிறேன். இந்த வி‌ஷயத்தில் சரியான முடிவை விரைவாக எடுப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கிறேன், நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    அரசு எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு தெரிவிப்பது கடமை ஆகும். தவறான முடிவுகள் எடுத்தால் அது மக்களை பாதிக்கும். எதுவாக இருந்தாலும் உரிய ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் செயல்படுவதே சிறப்பானதாக இருக்கும்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    Next Story
    ×