search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் வனப்பகுதியில் 11 அரிய வகை பறவைகள் கண்டுபிடிப்பு
    X

    கொடைக்கானல் வனப்பகுதியில் 11 அரிய வகை பறவைகள் கண்டுபிடிப்பு

    கொடைக்கானல் வனப்பகுதியில் 11 அரிய வகை பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 வகை வண்ணத்து பூச்சிகளும் உள்ளன.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டம் 2013-ம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதில் 9 வனச்சரகங்களும், 25 வனக்காப்பு காடுகளும், 7 வகையான வனக்காடுகளும் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள அரிய வகை பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் குறித்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு வண்ணத்து பூச்சிகள் சங்கம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இணைந்து பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இவர்கள் மொத்தம் 10 குழுக்களாக 30 இடங்களில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 90 வகையான பறவை இனங்களும், 136 வகையான வண்ணத்து பூச்சி இனங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 11 அரிய வகை பறவை இனங்களான நீலகிரி புறாக்கள், ஆந்தைகள், புல்வெளி பறவை, மரம் கொத்திகள் ஆகியவையும், 14 அரிய வகை வண்ணத்து பூச்சிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி முருகன் கூறுகையில், கொடைக்கானல் வன உயிரின சரணாலய பகுதியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 323 வகையான வண்ணத்து பூச்சி இனங்களில் கொடைக்கானல் வனப்பகுதியில் மட்டும் 136 இனங்கள் கண்டறியப்பட்டது.

    அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 282 பறவை இனங்களில் கொடைக்கானல் வனப்பகுதியில் மட்டும் 102 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தினால் அதிக எண்ணிக்கையில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சியினங்களை கண்டறியலாம், என்று கூறினார்.

    இந்த பணியில் வனச்சரகர்கள் ரவி, கிருஷ்ணசாமி, உஸ்மான், சமூக ஆர்வலர்கள் பாவேந்திரன், நிஷாந்த், பாலாஜி பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×