search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் அதிநவீன படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காட்சி
    X
    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் அதிநவீன படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காட்சி

    ராமேசுவரத்திற்கு நாளை பிரதமர் வருகை: கன்னியாகுமரி கடலில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பு

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் வருவதால் கன்னியாகுமரி கடலில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கன்னியாகுமரி:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு மண்டபம் திறப்புவிழா நாளை நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி இதில் பங்கேற்று மண்டபத்தை திறந்துவைக்கிறார்.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதி என்பதால் தீவிரவாதிகள் யாரும் கடல் வழியாக ஊடுருவாமல் இருக்க கடலிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி கடல் பகுதியிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜாக்’ ஆபரே‌ஷன் என்ற பாதுகாப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

    இதன்படி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீஸ் படையினர் அதிநவீன படகு மூலம் கன்னியாகுமரி கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    படகில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தங்களிடம் உள்ள அதிநவீன பைனாகுலர் உதவியுடன் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்படுகிறது. கடலில் சந்தேகத்திற்கு இடமாக படகுகள் ஊடுருவல் உள்ளதா என்று கண்காணித்தனர்.

    மேலும் குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள 44 கடற்கரை கிராமங்களிலும் உள்ளூர் போலீசார் உதவியுடன் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    Next Story
    ×