search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை - கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புகிறது
    X

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை - கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புகிறது

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

    இதில் குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு வந்தது.

    காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களாக கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 52 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இன்று காலையில் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 7386 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 4024 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் உச்சநீர்மட்டம் 124.80 அடி. அணையின் இன்றைய நீர்மட்டம் 88.70 அடியாக இருந்தது.

    இதே போல கேரளமாநிலம் வயநாடு பகுதியில் கன மழை பெய்ததால் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. கபினி அணையின் உச்ச நீர்மட்டம் 84 அடி. தற்போதைய நீர்மட்டம் 74 அடியை எட்டியுள்ளதால் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

    அணைக்கு தற்போது 6659 கன அடி தண்ணீர் வநது கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கர்நாடக மாநில விவசாய பணிகள் மற்றும் தமிழகத்திற்கும் என 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 24 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த மைசூரு, மாண்டியா மாவட்ட விவசாயிகள் அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்ததை உடனே நிறுத்த கேட்டு பல்வேறு இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விரைந்து சென்ற போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து தற்போது காவிரியில் கூடுதலாக திறக்கப்பட்ட 5 ஆயிரம் கன அடி தண்ணீர் நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர் மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2507 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 2444 கன அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று 26.32 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 26.77 அடியாக உயர்ந்தது.
    Next Story
    ×