search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிரிழப்பு
    X

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிரிழப்பு

    ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வந்தவர் காய்ச்சல், வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு, அவரது உடலில் தொற்றிய கிருமி ரத்தம் முழுவதும் பரவிவிட்டதால் உயிரிழந்துள்ளதாக ஸ்டான்லி ஆஸ்பத்தி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    ‘ஹெபடிட்டிஸ்’ என்னும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்படுவது உண்டு.

    சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ‘டயாலிசிஸ்’ முறையில் சிகிச்சை அளிக்கப்படும். டயாலிசிஸ் செய்யும் போது வேறு பல தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய நிலையில் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யும்போது உயிர் இழப்பு ஏற்படக்கூடும்.

    மாற்று சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதற்கு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து இருக்கின்றனர். சிறுநீரகம் கிடைத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்த முடியும்.

    சிறுநீரகம் கிடைக்கும் வரை டயாலிசிஸ் செய்து கொண்டே இருக்கும் போது சிலர் இறக்க வாய்ப்பு உள்ளது. ‘டயாலிசிஸ்’ செய்வதனால் மட்டுமே உயிர் இழப்பு ஏற்படும் என்று கூறுவது தவறான கருத்து என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 2014-ம் ஆண்டு பல்வேறு நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளித்ததில் 8 பேர் உயிர் இழந்ததாக அக்குடும்பத்தினர் நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை ஒரு நபர் கமி‌ஷன் விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெறும் போது 3 பேர் உயிர் இழந்தனர். கடந்த வாரம் செங்குன்றத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் (49) என்பவர் உயிர் இழந்துள்ளார். காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். கோட்டீஸ்வரன் 4 வருடங்களுக்கு முன்பே சிறுநீரக பிரச்சினையில் இருந்தார்.

    இதுகுறித்து கோட்டீஸ்வரனின் மனைவி கூறுகையில், கூலி வேலை செய்து வரும் என் கணவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. அவர் இங்கு வந்து டயாலிசிஸ் செய்து கொண்டு செல்வார்.

    கடந்த வாரம் வயிற்றுபோக்கு, காய்ச்சல் இருந்ததால் மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு ஏதோ நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதால் ‘கவுண்ட்ஸ்’ அதிகமாக உள்ளது. பைரல் லோடு குறைவாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.

    திடீரென என் கணவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். இப்போது என் குழந்தைகளுடன் அனாதையாக தவிக்கிறேன் என்றார்.

    இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்தி நிர்வாகம் தரப்பில் கூறும் போது, டயாலிசிஸ்க்கும் அவரது உயிர் இழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சிறுநீரக பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றாலும் கூட தற்போது அவர் அதனால் பாதிக்கப்படவில்லை.

    காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடலில் தொற்றிய கிருமி ரத்தம் முழுவதும் பரவி விட்டதால் உயிர் இழந்துள்ளார். இதற்கும் மஞ்சள் காமாலை நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×