search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பை விளக்கி நெடுவாசல் பொதுமக்கள் நூதன போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பை விளக்கி நெடுவாசல் பொதுமக்கள் நூதன போராட்டம்

    ஹைட்ரோகார்பன் திட்டபாதிப்பை விளக்கும் வகையில் நெடுவாசல் பொது மக்கள் மயங்கி விழுந்தது போன்று நடித்து காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், நெடுவாசலில் 80-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பலமாதங்களாக போராடிவரும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    இந்த நிலையில் நேற்று காலை தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கொடியாலம் சாலையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவன ஆழ்துளை எண்ணெய் கிணறு அருகே வயல் பகுதியில் செல்லும் குழாய் உடைந்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. தீப்பற்றியும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கூறி அந்த பகுதி பொது மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெடுவாசலிலும் இது போன்று சம்பவம் நடந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் நெடுவாசல் பொதுமக்கள் மயக்கம் அடைந்து விழுந்து கிடப்பது போன்று நடித்து காட்டினர். இந்த நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×