search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழையால் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: மெயினருவியில் குளிக்க 3-வது நாளாக தடை
    X

    பலத்த மழையால் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: மெயினருவியில் குளிக்க 3-வது நாளாக தடை

    குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தென்காசி:

    நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும் சாரல் மழையுடன் குளுகுளு சீசன் நிலவும். இந்த ஆண்டு குற்றால சீசன் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கியது.

    தொடக்கத்தில் சீசன் ‘டல்’ அடித்த நிலையில் 2 வாரத்திற்கு பிறகு சாரல் மழை பெய்ய தொடங்கியதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த வாரம் முதல் குற்றாலத்தில் சீசன்களை கட்ட தொடங்கியது. அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளுகுளு தட்பவெப்ப நிலை நிலவியது. இதையடுத்து குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    இந்நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று முன்தினம் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் பழைய குற்றாலம், புலியருவியில் தண்ணீர் மிதமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்தனர்.

    மெயினருவி, ஐந்தருவியில் நேற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் அந்த அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலம் மழைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பழைய குற்றாலம் மற்றும் புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அருவிக்கரையில் நின்றபடி அருவியை பார்த்து விட்டு திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் குற்றாலம் மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவியில் ஆர்ச் மீது தண்ணீர் விழுந்ததால் அங்கு குளிக்க இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

    ஐந்தருவி, பழையகுற்றால அருவி மற்றும் புலியருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளுக்கு சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
    Next Story
    ×