search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: டெங்கு பீதியில் பொதுமக்கள்
    X

    ஆப்பக்கூடல் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: டெங்கு பீதியில் பொதுமக்கள்

    ஆப்பக்கூடல் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கரட்டுப்பாளையத்திலும் நோய் பாதிப்பு தென்பட்டது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    இவர்களைப்போல 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்தியூர், ஆப்பக்கூடல், ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

    இந்த நிலையில் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பெண் பெயர் சுதா (வயது 32).

    வடிவேலு என்பவரின் மனைவியான இவர் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாததால் அவர் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. அதில் அவருக்கு மர்மக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சுதா பரிதாபமாக இறந்தார்.

    அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் ஆப்பக்கூடல் பகுதி மக்களிடையே பரவியதால் அவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஏற்கனவே பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதுமே கரட்டுப்பாளையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கியது.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலு சாமி, ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், டாக்டர் ரம்யா, பவானி வட்டார மருத்துவ செயலாளர் டாக்டர் தனலட்சுமி மற்றும் செவிலியர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆப்பக்கூடல் பகுதிக்கு சென்றனர்.

    அவர்கள் ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதிகளான கரட்டுப்பாளையம், புதுப்பாளையம், ஆப்பக்கூடல், சுக்காநாயக்கனூர், சாத்தநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மர்மக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தனர்.

    கொசுப்புழுக்களை ஒழிக்க மருந்தும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் கொடுக்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க அந்த பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    மர்மக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய நோட்டீசுகளும் மக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தற்போது கரட்டுப்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியாகி இருப்பதால் அங்கு தொடர்ந்து சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×