search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து
    X

    ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

    ரம்ஜான் பண்டிகையொட்டி தலைவர் ஒ.பன்னீர்செல்வம், தமிழக காங்கரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்:-

    தூய்மை உணர்வோடு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, ஏழை- எளியோருக்கு உணவளித்து, உதவிகள் அளித்து, எல்லோரும் இன்புற்று வாழ இறைவனைத்தொழுது, இஸ்லாமியப்பெருமக்கள் கொண்டாடி மகிழும் திருநாள் தான் ரம்ஜான் பண்டிகை அனைவரிடத்திலும், அன்பு செலுத்தவும், சகோதரத் துவத்துடன் வாழ்ந்திடவும் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பொங்கிடவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக காங்கரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    விரதம் எனும் நோன்பு ஒரு பொதுவான அம்சமாக அனைத்து மதங்களிலும் உள்ளது என்ற பொது உண்மையை, இஸ்லாம் உலக மக்களுக்கு உணர்த்துகிறது. நபிகள் நாயகம்(ஸல்) வழியில் ஜக்கத் என்னும் ஏழை வரியை பொதுநிதியங்களில் செலுத்தி , ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.

    இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய வாழ்த்தக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:-

    இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே என்ற அடிப்படையில் ஏழை எளியவர்கள் மீது பரிவு காட்டி உண்ண உணவளித்து, உடுக்க உடை கொடுத்து, தனாதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ:-

    புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து அந்தி சாயும் நேரம் வரை பசி பொறுத்து உணவு உண்ணாமல், தாகத்தைத தாங்கி தண்ணீர் அருந்தாமல் புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு தவம் இருத்தலை நிறைவு செய்கின்ற வகையில் ரமலான் பெருநாள் அமைகின்றது.

    ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப்பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    மனிதநேயம் தான் ஜனநாயகத்தையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் வென்றெடுக்கும் வல்லமை வாய்ந்தது. அத்தகைய மகத்துவத்தைப் பெற்றுள்ள இஸ்லாம், இஸ்லாமியரல்லாத பிற சமூகத்தினரையும் அரவணைக்கும் நெகிழ்வுத் தன்மையைப் பெற்றுள்ளது.

    வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்கா வகையில் மானுடத்தை வழி நடத்தும் இஸ்லாம் அனைத்துத் தரப்பினருக்குமிடையில் சமூக நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கிறது.

    புனித ரமலான் மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உணவும், பொருளும் கொடுக்க வேண்டும், எல்லோரிடமும் அன்பு காட்ட வேண் டும்,இறைவன் மீது நம்பிக்கை வைத்து தொழில் செய்ய வேண்டும்.

    இந்த புனித ரமலான் மாதத்தில் அனைவரும் ஒற்றுமையுடன், ஒன்றுப்பட்டு வாழ்வோம், எல்லோரும், எல்லா வளங்களையும், நலங்களையும் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர்காதர் மொகிதீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர். தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ. நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் எஸ். ஜே. இளாயத்துல்லா தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா,கோகுலமக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×