search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3012 கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3012 கன அடியாக சரிவு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு இன்று நீர் வரத்து 3012 கன அடியாக குறைந்தது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் 2,329 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று மேலும் அதிகரித்து 4,169 கன அடியானது.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 20.85 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 21.86 அடியானது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு இன்று நீர் வரத்து 3012 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் இன்று 22.52 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களிலும் மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையை தூர் வாரும் பணியை அணையின் நீர்தேக்க பகுதியான மூலக்காட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

    2-வது நாளாக இன்றும் வண்டல் மண், களிமண்ணை விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக டிராக்டர்களில் ஆர்வத்துடன் எடுத்து செல்கின்றனர். இதனால் அணை விரைவில் கூடுதல் தண்ணீர் கொள்ளளவை பெறும்.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் வரத்து உள்ளது. இதனால் ஒகேனக்கலில் அனைத்து அருவிகளிலும் செம்மண் நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கலில் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    அவர்கள் அங்குள்ள அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல்களிலும் உற்சாகமாக சவாரி சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குடும்பம், குடும்பம் வந்த சுற்றுலா பயணிகள் மீன்களை வாங்கி சமையல் செய்து சாப்பிட்டனர்.

    ஒகேனக்கலில் இன்றும் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் காலை முதலே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து அங்குள்ள அருவிகளில் உற்சாகத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×