search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக ஏடீஸ் கொசு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு டெங்கு காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சல் படிப்படியாக மாவட்டம் முழுவதும் பரவியது. இதில் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இந்த காய்ச்சல் மாவட்டத்தில் பரவுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட பலர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் சங்கரன் கோவில், கீழக்கடையம், சிங்கை பகுதியில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. இவர்களில் பலர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கான பிரத்யேக வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் கள்.

    இவர்களில் டெங்கு காய்ச்சல் என கண்டறியப்பட்டவர்கள் மருத்துவர்களின் விசே‌ஷ கண்காணிப்பில் தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிங்கை பகுதிகளில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மேலும் இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிங்கை மேலக்கொட்டாரம் பண்டாரம் மனைவி நாராயண செல்வி(வயது27), இதே பகுதியை சேர்ந்த ரவி மனைவி சிதம்பர வள்ளி (30) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்ளுரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் டெங்கு காய்ச்சல் என்று தெரிந்ததும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை வரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன. ஏற்கனவே சுகாதார துறை சார்பாக ஒரு குழுவினர் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதித்த இடங்களை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் கலெக்டர் கருணாகரன் உத்தரவின்பேரில் மண்டல அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில் பொதுவாக குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

    இதனால் பொதுமக்கள் குடிநீரை பிடித்து வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டெங்கு கொசுக்கள் பொதுவாக நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். இதன் காரணமாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். கொசு தேங்கும் வகையில் காலி டப்பாக்கள், டயர்கள் மற்றும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.


    Next Story
    ×