search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் திடீர் தீ விபத்து
    X

    திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் திடீர் தீ விபத்து

    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தேவஸ்தான அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
    காரைக்கால்:

    காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தேவஸ்தான அலுவலகத்தின் ஒரு பகுதியில் கோவிலின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    தேவஸ்தான பணியாளர்கள் நேற்று காலை கட்டுப்பாட்டு அறையில் உள்ள குளிர்சாதனத்தை இயக்கி விட்டு சென்றனர். சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்த மின்சார வயர் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனால் கட்டுப்பாட்டு அறை, அருகில் உள்ள தேவஸ்தான மேலாளர் அறை, அலுவலக அறைகளிலும் தீ பரவியது.

    மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் தீப்பிடித்த பகுதிக்குள் யாரும் செல்லாதபடி ராஜகோபுர வாயிலில் தடுப்புகள் அமைத்து தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுப்பினர். மின்துறையினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. தேவஸ்தான மேலாளர் அறையில் இருந்த பல்வேறு ஆவணங்கள் கருகின. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×