search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவில் அதிவேகமாக சென்ற 11 தனியார் பஸ்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி நடவடிக்கை
    X

    கிணத்துக்கடவில் அதிவேகமாக சென்ற 11 தனியார் பஸ்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி நடவடிக்கை

    கிணத்துக்கடவில் அதிவேகமாக சென்ற 11 தனியார் பஸ்களை போலீசார் இன்று மடக்கி பிடித்தனர். விதிமுறை மீறி பஸ்களை வேகமாக இயக்கியதாக கூறி டிரைவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை- பொள்ளாச்சி சாலை நான்கு வழியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைகளில் பல இடங்களில் மேடான பகுதிகளில் மண் அப்புறப் படுத்த பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெறும் இடங்களில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டும் உள்ளது.

    இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிகள் ஒருபுறம் நடைபெற்றாலும் இந்த சாலையில் செல்லும் தனியார் பஸ்களின் வேகத்தால் பயணிகள் அச்சத்திலேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும் தனியார் பஸ்களை பார்த்தால் பயந்து ஒதுங்க வேண்டியுள்ளது. சாலை விரிவாக்க பணி செய்பவர்களும் அவதிப்படுகின்றனர்.

    இது போன்ற நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற 2 தனியார் பஸ்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல பல கி.மீ தூரத்திற்கு போட்டி போட்டுச் சென்றதை பொதுமக்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியதுடன் பொள்ளாச்சி சப்- கலெக்டர் காயத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து சப்- கலெக்டர் அந்த 2 தனியார் பஸ்கள் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதி வேகமாக சென்ற பஸ் டிரைவர்கள் நாகராஜ் மற்றும் செல்லத்துரை ஆகியோரின் ஓட்டுனர் உரிமத்தை பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட டிரைவர்களிடம் விசாரனை நடத்த உள்ளதாகவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி சாலையில் விதிமுறையை மீறி வேகமாச செல்லும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதைதொடர்ந்து இன்று காலை முதலே கிணத்துக்கடவு போலீசார் தனியார் பஸ்களை கண்காணித்து வந்தனர்.

    அப்போது கிணத்துக்கடவில் அதிவேகமாக சென்ற 11 தனியார் பஸ்களை போலீசார் இன்று மடக்கி பிடித்தனர்.

    விதிமுறை மீறி பஸ்களை வேகமாக இயக்கியதாக கூறி டிரைவர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 11 பஸ்களும் பறிமுதல் செய்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி கூறும் போது, ‘‘ பயணிகளை அச்சுறுத்தும் வகையில் வேகமாக பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

    Next Story
    ×