search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமானுஜர் 1000-வது ஆண்டு விழா: ஸ்ரீபெரும்புதூரில் 3 நாட்களுக்கு வாகனங்களுக்கு தடை
    X

    ராமானுஜர் 1000-வது ஆண்டு விழா: ஸ்ரீபெரும்புதூரில் 3 நாட்களுக்கு வாகனங்களுக்கு தடை

    ராமானுஜர் 1000-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 30-ந் தேதி முதல் 2-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு அவதார உற்சவம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த விழா மே 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    வழக்கமாக ராமானுஜர் காவி உடையில் தான் காட்சி தருவார். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் வெள்ளை ஆடை அணிந்து குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருவார். இந்த விழா நேற்று நடைபெற்றது. இது கூரேச விஜயம் என அழைக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி ராமானுஜர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வலம் வருகிறார். மே 1-ந் தேதி ராமானுஜர் அவதரித்த திருவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை, ஆராதனை திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    இந்த இரு விழாக்களிலும் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஜீயர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றிலும் புதியதாக சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட நவீன ரெடிமேட் கழிவறைகள் வைக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    திருதேர் அன்று அன்னதான வழங்க பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னர் தான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பேரூராட்சி முழுவம் பிளாஸ்டிக் பொருட்கள் கேரிபேக், பாக்கெட் தண்ணீர், மோர் பாக்கெட் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு 30-ந் தேதி முதல் 2-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் இந்திரா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.

    சென்னையில் இருந்து காஞ்சீபுரம், வேலூர் செல்லும் பஸ்கள் ஸ்ரீபெரும் புதூர் நுழைவு வாயிலில் அருகே நின்று பைபாஸ் வழியாக செல்லும். பக்தர்களின் கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் வன போஜன மடம் அருகே நிறுத்த வேண்டும். விஐ.பி. கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் ஜெயின் கோவில் அருகே நிறுத்தப்படும்.

    பெண் பக்தர்கள் அனைவருக்கும் பெண் காவலர்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்க சேப்டி பின் அணிவிக்கப்படுகிறது.

    பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட போலீசாரார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×