search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்தை லீவ் செய்ய வேண்டும்: முன்னாள் வீரர் ஆலோசனை
    X

    ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்தை லீவ் செய்ய வேண்டும்: முன்னாள் வீரர் ஆலோசனை

    செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்தை லீவ் செய்ய வேண்டும் என சந்து போர்டு ஆலோசனை வழங்கியுள்ளார். #SAvIND #ViratKohli
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆன இந்தியா, 2-வது இன்னிங்சில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்காவின் துள்ளியமான பந்து வீச்சால் 135 ரன்னில் சுருண்டது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விக்கெட் கீப்பரிடமும், ஸ்லிப் திசையிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். 2-வது டெஸ்ட் நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது.

    செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஆடுகளத்தில் அதிக அளவில் பவுன்சும், வேகமும் இருக்கும். கேப் டவுன் போன்று பெருமளவில் ஸ்விங் இருக்காது எனக்கூறப்படுகிறது. இதனால் ஓரளவிற்கு ரன்கள் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்கள் குவிக்க முன்னாள் வீரர் சந்து போர்டு ஆலோசனை வழங்கியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து சந்து போர்டு கூறுகையில் ‘‘முதல் விஷயம் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதுதான். இதுதான் முக்கியம். குறிப்பாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பிட்ச் ஆகும் பந்தை லீவ் செய்ய வேண்டும். இந்தியாவின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விக்கெட் கீப்பரிடமும், ஸ்லிப் திசைகளிலும்தான் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

    ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பிட்ச் ஆகும் பந்தை எதிர்கொள்வதில் பேட்ஸ்மேன்கள் தங்களது நுட்பத்திறனை மாற்றிக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் பந்தை நன்றாக லீவ் செய்ய வேண்டும். ஆடுகளத்தில் நிலைத்து நின்ற பின்னர், பவுன்சர் மற்றும் வேகப்பந்தை விளாச முடியும்.



    பேட்ஸ்மேன்கள் க்ரீஸ்க்குள் நின்று விளையாடுவதற்குப் பதிலாக, க்ரீஸை விட்டு சுமார் 6 இன்ஞ் வெளியில் நின்று பந்தை முன்னதாகவே சந்திக்க வேண்டும். பந்தை ஸ்விங் செய்ய அனுமதிக்கக்கூடாது.

    இப்படி உங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றால், பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியதில்லை. உண்மையிலேயே முதல் டெஸ்ட் சிறப்பான ஆட்டம். அவர்கள் 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டதன் காரணமாக கலக்கம் இருக்கும். முதல் டெஸ்டில் இந்திய பேட்ஸமேன்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால், 2-வது டெஸ்டில் மாறுபட்ட இந்திய அணியை உங்களால் பார்க்க முடியும்’’ என்றார். #SAvIND #ViratKohli #CenturionTest
    Next Story
    ×