search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    350 இலக்கை எங்களால் சேஸ் செய்ய இயலும்: புஜாரா நம்பிக்கை
    X

    350 இலக்கை எங்களால் சேஸ் செய்ய இயலும்: புஜாரா நம்பிக்கை

    கேப் டவுனில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் 350 இலங்கை எங்களால் சேஸ் செய்ய இயலும் என புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #SAvIND #Pujara
    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் சுருண்டது.

    ஹர்த்திக் பாண்டியா ஒருவர் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 95 பந்தில் 93 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும். அவரும் புவனேஸ்வர்குமாரும் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 99 ரன் எடுத்து சாதனை படைத்தனர். பிலாண்டர், ரபாடா தலா 3 விக்கெட்டும், மோர்னே மோர்கல், ஸ்டெயின் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    77 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர்கள் எல்கர், மார்கிராம் ஆகியோர் ஆட்டம் இழந்தனர். இந்த இருவரையும் பாண்டியா அவுட் செய்தார். தென்ஆப்பிரிக்கா ஒட்டு மொத்தமாக 142 ரன்கள் முன்னிலை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கேப் டவுன் டெஸ்ட் குறித்து இந்திய பேட்ஸ்மேன் புஜாரா கூறுகையில் ‘‘நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அதிகமான ரன் இலக்கு நிர்ணயிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஆடுகளத்தின் தன்மையை வைத்து பார்க்கும்போது 350 ரன் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் எங்களால் அந்த ரன்னை எடுத்து வெற்றி பெற இயலும்.



    முதல் இன்னிங்சில் எங்களது முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. 2-வது இன்னிங்சில் அவர்கள் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள் என்று கருதுகிறேன். அப்படி எங்களது பேட்டிங் நன்றாக அமைந்துவிட்டால் 350 ரன்னுக்கு மேலாக இலக்கை நிச்சயமாக எடுக்க முடியும். ஹர்த்திக் பாண்டியாவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது’’ என்றார்.

    அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் ரபாடா ‘‘இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். எவ்வளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் அது இந்தியாவுக்கு சவாலாகவே இருக்கும்” என்றார். #SAvIND #Pujara #INDvSA #Rabada
    Next Story
    ×