search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை:  இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக்
    X

    ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக்

    ஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டயர் குக் கூறியுள்ளார்.
    பெர்த்:

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கும்.

    இந்த போட்டி இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டயர் குக்கின் 150-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் இங்கிலாந்து வீரர், ஒட்டுமொத்த அளவில் 8-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் அவர் சோபிக்க தவறியதால் (2, 7, 37, 16 ரன்) இந்த தொடருடன் ஓய்வு பெறக்கூடும் என்று முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கூறியிருந்தனர்.

    இது பற்றி 32 வயதான அலஸ்டயர் குக்கிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது, ‘எதிர்காலம் குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எப்போது ஓய்வு பெறுவேன் என்பது எனக்கு தெரியாது. தற்போது முழு கவனமும் இந்த டெஸ்ட் மீது தான் (பெர்த்) இருக்கிறது. எனது வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டி இதுவாகும்.

    என்னை பற்றி விமர்சித்தவர்களுக்கு என்னிடம் பேசுவதற்கு நேரம் இல்லை போலும். வலை பயிற்சியில் நான் இன்னும் கடினமாக உழைப்பது அவர்களுக்கு தெரியாது. பேட்டிங் பயிற்சியாளருடனும் நிறைய நேரம் செலவிடுகிறேன். இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் இருக்கிறேன்’ என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, ‘150-வது டெஸ்டில் ஆடுவது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். அது மட்டுமின்றி காயமின்றி தொடர்ச்சியாக 147 டெஸ்டுகளில் விளையாடியது அதிர்ஷ்டமே’ என்றார்.
    Next Story
    ×