என் மலர்
செய்திகள்

இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்: சேப்பாக்கத்தில் நாளை கிரிக்கெட் கோலாகலம்
சென்னை:
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுதவற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இறுதிகட்ட பயிற்சியில் இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.
இதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் பொருந்தியவை என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.
தவான் விளையாட வில்லை என்பதால் அவருக்கு பதிலாக ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக யார் ஆடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரகானே, ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ரகானேக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வாய்ப்பை பெற்ற மனிஷ் பாண்டே தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவர் மிடில் ஆர்டரில் இடம் பெறுவார்.
பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, முன்னாள் கேப்டன் டோனி, ரோகித் சர்மா மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை தொடரில் கோலியும், ரோகித் சர்மாவும் இரண்டு சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர்.
இதேபோல டோனியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு ஆஸ்திரேலியா தொடரிலும் இருக்கிறது.
அஸ்வின், ஜடேஜா இல்லாமல் 2-வது முறையாக இந்திய அணி புதுமுக சுழற்பந்து வீரர்களுடன் ஆடுகிறது. அக்ஷர் பட்டேல், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் இலங்கை தொடரில் நேர்த்தியாக பந்துவீசினார். இதில் இருவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவர்.
வேகப்பந்து வீரர்களான உமேஷ்யாதவ், முகமது ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஏற்கனவே பும்ராவும், புவனேஸ்வர்குமாரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை தொடரில் பும்ரா 15 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருடன் மூவரில் ஒருவர் இணைந்து இடம் பெறுவர்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் சுமித், வார்னர், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் கும்மின்ஸ், நாதன் கோல்டர், பலக்னெர் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
காயத்தால் தொடக்க வீரர் ஆரோன்பிஞ்ச் ஆட முடியாமல் போனது. அந்த அணிக்கு பாதகமே. இதனால் அவருக்கு பதிலாக ஹார்னருடன் தொடக்க வீரராக டிரெவிஸ்ஹெட் அல்லது ஹேன்ட்ஸ் ஹோம் இடம் பெறலாம்.
நாளைய ஆட்டம் பகல்-இரவில் நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன், தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்சும் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.






