search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்: கோவை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    டி.என்.பி.எல்: கோவை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதிச் சுற்றில் கோவை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.


    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதிச் சுற்றில் கோவை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

    8 அணிகள் பங்கேற்ற 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

    இந்நிலையில், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று நெல்லையில் மோதின.

    டாசில் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் முரளி விஜய், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்ய பிரகாசும், முரளி விஜயும் களமிறங்கினர்.

    ஆனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கோவை கிங்ஸ் அணியினர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

    முதலில் சூர்யபிரகாஷ் 4 ரன்னுக்கும், அனிருத் சீதாராம் 19 ரன்னுக்கும், முரளி விஜய் 24 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த அக்‌ஷய் சீனிவாசன், ரவிகுமார் ரோஹித் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்தனர். கோவை 
    கிங்ஸ் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் களமிறங்கிய மொகமது அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரி அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 96 ஆக இருந்தது.

    அப்போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பின், கோவை கிங்ஸ் அணியினர் அடித்து விளையாடினர். 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவிக்குமார் 32 ரன்கள் எடுத்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சாய் கிஷோர், அலெக்சாண்டர், அந்தோனி தாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அருண்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்களை இலக்காக கொண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் களமிறங்கினர். சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் 12 ரன்களில் ஆவுட் ஆனார். அடுத்து தலைவன் சற்குணத்துடன் கார்த்திக் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினர். 11 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

    அதன்பின் தொடர் மழைகாரணமாக ஆட்டம் முடிக்கப்பட்டது. வீ.ஜே.டி. வீதிகளின்படி சேப்பாக் அணியின் வெற்றிக்கு 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தால் போதுமானது. ஆனால், அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.

    வருகிற 20-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் அணி சென்ற ஆண்டின் சாம்பியனான தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

    கடந்த ஆண்டும் இந்த இரு அணிகளே இறுதிப்போட்டியில் பலப்பரிட்சை செய்தன. அப்போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    Next Story
    ×