search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிராக இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா?
    X

    இலங்கைக்கு எதிராக இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா?

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹாட்ரிக்’ சாதனை புரியுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    பல்லேகலே:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது.

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹாட்ரிக்’ சாதனை புரியுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்வதால் இந்த டெஸ்டிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருக்கிறது. பேட்டிங்கில் புஜாரா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இரண்டு சதத்துடன் 301 ரன் குவித்துள்ளார். இதுதவிர தவான் (234 ரன்), ரகானே (212), கேப்டன் விராட் கோலி, லோகேஷ், ராகுல் போன்றவர்களும் சிறப்பான நிலையில் உள்ளனர்.

    ‘சஸ்பெண்டு’ காரணமாக ஜடேஜா ஆட முடியாதது பாதிப்பே. ஏனென்றால் அவர் 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் இடத்தில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அக்‌ஷர் பட்டேல் முதல் முறையாக டெஸ்டில் ஆடுவாரா? அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுழற்பந்து வீச்சில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அஸ்வின் இருக்கிறார். அவர் 11 விக்கெட் எடுத்துள்ளார். முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் வேகப்பந்தில் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.

    இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தொடரை முழுமையாக இழக்காமல் இருக்கும் வகையில் இலங்கை அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். முன்னணி சுழற்பந்து வீரரான ஹெராத் காயத்தால் விலகியது இலங்கை அணிக்கு பாதிப்பே.

    அந்த அணியின் பேட்டிங்கில் கருணா ரத்னே (265 ரன்), குஷால் மெண்டீஸ் (212) ஆகியோரும் பந்து வீச்சில் பிரதீப்பும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய 40 போட்டியில் இந்தியா 18 டெஸ்டிலும், இலங்கை 7 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், தவான், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்குமார், அபினவ் முகுந்த், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா.

    இலங்கை: சன்டிமால் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணா ரத்னே, கவுசல் மெண்டீஸ், மேத்யூஸ், டிக்வெலா, தில்ருவன் பெரைரா, பிரதீப், குஷால் பெரைரா, குணரத்னே, திரிமானே, தனஞ்செயன் டிசில்வா, லகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, நுவன் பிரதீப், புஷ்பக் குமாரா, சண்டகன், சமீரா, லாஹிரு காமகே.
    Next Story
    ×