search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலே டெஸ்ட்: இலங்கை 154 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்; இந்தியா 600
    X

    காலே டெஸ்ட்: இலங்கை 154 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்; இந்தியா 600

    காலேயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தவான் (190), புஜாரா (144 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. புஜாரா 144 ரன்களுடனும், ரகானே 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் புஜாரா 150 ரன்னைக் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 153 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 57 ரன்கள் எடுத்த நிலையில் குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார்.



    அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி 47 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சஹா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 15 ரன்க்ள எடுத்து ஆட்டம் இழந்தார். 8-வது விக்கெட் இழப்பிற்கு ஹர்திக் பாண்டியா உடன் மொகமது ஷமி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    ஷமி 30 பந்தில் 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் குவித்தது.

    இந்திய அணி 600 ரன்னாக இருக்கும்போது கடைசி விக்கெட்டாக ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. உமேஷ் யாதவ் 10 பந்தில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரதீப், குமாரா ஆகியோர் முறையே 6 விக்கெட்டும், 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கருணாரத்னேயும், உபுல் தரங்காவும் களம் இறங்கினார்கள். கருணாரத்னே நிதானமாக விளையாட உபுல் தரங்கா அதிரடியாக விளையாடினார். கருணாரத்னே 2 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து குணதிலகா களம் இறங்கினார். இவரை 16 ரன்னிலும், அடுத்து வந்த குசால் மெண்டிஸை டக்அவுட்டிலும் வெளியேற்றினார் மொகமது ஷமி.

    உபுல் தரங்கா 44 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தரங்கா 64 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார்.

    6-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் பெரேரா ஜோடி சேர்ந்தார். மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

    இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 54 ரன்களுடனும், பெரேரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 446 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் இந்தியா 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகுக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×