search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் காலேயில் இன்று தொடக்கம்
    X

    இந்தியா - இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் காலேயில் இன்று தொடக்கம்

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்குகிறது.
    காலே :

    6 வார கால பயணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ‘நம்பர் ஒன்’ அணியாக விளங்கும் இந்தியா, கடைசியாக ஆடிய 7 டெஸ்ட் தொடர்களிலும் வரிசையாக வெற்றி பெற்று வீறுநடை போட்டு வருகிறது. இலங்கை மண்ணிலும் அதை தொடர்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். வைரஸ் காய்ச்சலால் லோகேஷ் ராகுல் விலகியுள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்த், ஷிகர் தவானுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். பயிற்சி ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி சொதப்பிய முகுந்த் இந்த பொன்னான வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொள்ள தவறினால் அதன் பிறகு மீண்டும் இடம் கிடைப்பது கடினம் தான்.

    காலே ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. கடைசி 3 நாட்களில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பும். அதனால் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதல் தொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது பற்றி அணி நிர்வாகம் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஹர்திக் பாண்ட்யா இந்த போட்டியின் மூலம் டெஸ்டில் அறிமுக வீரராக கால் பதிக்கலாம். இதை கேப்டன் கோலியும் சூசகமாக தெவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் இன்னிங்சில் மெகா ஸ்கோரை குவித்து விட்டால் அதன் பிறகு எதிரணியை நெருக்கடிக்குள் அமுக்கி விடலாம். அதை நமது பேட்ஸ்மேன்கள் சரியாக செய்ய வேண்டியது அவசியம். இதேபோல் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணியைத் தான் நமது அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் வெற்றிக்கனி எளிதாக கனிந்து விடும். புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பது கவனிக்கத்தக்கது.


    பயிற்சி இடையே ஓய்வு எடுக்கும் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

    சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே, முரளிதரன் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு காலியான வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் இலங்கை அணி போராடிக்கொண்டு இருக்கிறது. பெரிய அளவில் எழுச்சி பெற முடியவில்லை. புதிய கேப்டன் தினேஷ் சன்டிமால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக 39 வயதான ஹெராத் இலங்கை அணியை வழிநடத்த இருக்கிறார்.

    ஹெராத், தில்ருவான் பெரேரா ஆகியோர் சுழற்பந்து வீச்சின் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். 30 வயதான புஷ்பகுமாராவை கூட 3-வது சுழல் ஆயுதமாக பிரயோகிக்க வாய்ப்புள்ளது. உள்ளூரில் எப்போதும் மிரட்டக்கூடிய ஒரு அணி இலங்கை. அதனால் அந்த அணிக்கு போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். 2015-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டில் இந்திய அணி 176 ரன்கள் இலக்கை கூட ‘சேசிங்’ செய்ய முடியாமல் ஹெராத்தின் சுழலில் சுருண்டதும், அதன் பிறகு அடுத்த இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றதும் நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபினவ் முகுந்த், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா அல்லது ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது முகமது ஷமி அல்லது குல்தீப் யாதவ்.

    இலங்கை: தரங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், குணதிலகா, மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, குணரத்னே, தில்ருவான் பெரேரா, ஹெராத் (கேப்டன்), நுவான் பிரதீப், லாஹிரு குமாரா அல்லது புஷ்பகுமாரா.
    Next Story
    ×