search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்திய பெண்கள் அணி சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்திய பெண்கள் அணி சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

    பெண்களுக்கான ஹாக்கி உலக லீக் அரையிறுதித் தொடரில் இந்திய அணி, சிலி அணியை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
    பெண்களுக்கான ஹாக்கி உலக லீக் அரையிறுத் தொடர், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சிலி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் துவக்கத்தில் இருந்தே கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் (38-வது நிமிடம்) பிரீத்தி துபே கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகும் தொடர்ந்து கோல் அடித்து வலுவான நிலைக்கு செல்ல முயற்சித்தனர். ஆனால், ரேணுகா யாதவ் மஞ்சள் கார்டு பெற்று வெளியேறியதால் ஆட்டத்தால் திருப்பு முனை ஏற்பட்டது.

    அதேசமயத்தில் சிலி வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை கோலாக்க முயன்றனர். ஆனால், இந்திய வீராங்கனைகள் போராடி தடுத்தனர். இதனால் கடைசி வரை சிலியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எனவே, இறுதியில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தது.

    இந்த தொடரில் இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-4 என தோல்வி அடைந்தது.

    16-ம் தேதி நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×