search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தொடரில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்கிறேன்: கருண் நாயர்
    X

    இலங்கை தொடரில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்கிறேன்: கருண் நாயர்

    முச்சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கருண் நாயர், இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரர் யார் என்றால், சட்டென்று நினைவிற்கு வருவது சேவாக் பெயர்தான். கடந்த வருடம் சேவாக்குடன் கருண் நாயரும் இணைந்து கொண்டார்.

    25 வயதாகும் கருண் நாயர் மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இந்த டெஸ்டில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து மும்பையில் நடைபெற்ற போட்டியில் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கேப்டன் விராட் கோலி அவர்மீது நம்பிக்கை வைத்து சென்னை டெஸ்ட்டில் களம் இறக்கினார். இந்த போட்டியில் 381 பந்துகளை சந்தித்து 303 ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்தார்.

    அதன்பின் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் பெங்களூரு (26, 0), ராஞ்சி (23), தரம்சாலா (5) ஆகிய மைதானங்களில் சொதப்பினார். நான்கு இன்னிங்சில் 54 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    தற்போது இந்தியா இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கருண் நீக்கப்பட்டு ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.



    இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கிறேன். தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான தொடரில் கவனம் செலுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கருண் நாயர் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் முடிவிற்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். இது ஒருபுறம் இருக்க, நான் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு முன் நான் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது கிடையாது. இது புது அனுபவமாக இருக்கப்போகிறது. என்னைத் தயார்படுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.
    Next Story
    ×