search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: கோப்பையை வெல்ல கடும் போர் நடக்கும்- தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன்
    X

    புரோ கபடி லீக்: கோப்பையை வெல்ல கடும் போர் நடக்கும்- தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன்

    ‘இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டியில் கோப்பையை வெல்ல அணிகள் இடையே கடும் போர் நடக்கும்’ என்று தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    சென்னை:

    2014-ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. முதலாவது ஆண்டில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2015-ம் ஆண்டில் யு மும்பை அணியும், கடந்த ஆண்டில் (2016) நடந்த இரண்டு போட்டியிலும் பாட்னா பைரட்ஸ் அணியும் கோப்பையை வென்றன.

    இந்த ஆண்டுக்கான 5-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 8-ல் இருந்து 12 ஆக உயர்ந்து இருக்கிறது. புதிய அணிகளாக தமிழ் தலைவாஸ், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. போட்டிகள் 12 நகரங்களில் அரங்கேறுகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி சென்னையில் அக்டோபர் 28-ந் தேதி நடக்கிறது.

    அணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாலும், தமிழக அணி புதிதாக இணைந்து இருப்பதாலும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. புதிதாக போட்டியில் கால்பதிக்கும் தமிழ் தலைவாஸ் அணி கடந்த மாதம் 14-ந் தேதி முதல் சென்னையில் முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 25-ந் தேதி வரை தொடருகிறது.

    இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளரான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளருமான, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கே.பாஸ்கரன் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்பெல்லாம் புரோ கபடி போட்டி ஒரு சீசனில் 40 நாட்கள் தான் நடக்கும். தற்போது 12 அணிகள் பங்கேற்பதால் போட்டி தொடர் 3 மாதங்கள் நடைபெறுகிறது. உள்ளூரில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைப்பது எல்லா அணிகளுக்கும் சாதகமான அம்சமாகும். வெளியூரில் குறைந்த ஆட்டங்களில் தான் விளையாட வேண்டியது இருக்கும். எல்லா அணிகளுமே சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் 2 பேரும், நடுத்தர திறன் கொண்ட வீரர்கள் 3 பேரும், இளைஞர்கள் அதிக அளவிலும் இடம் பெற்றுள்ளனர். மலேசியா, தென்கொரியா, ஓமன் நாடுகளை சேர்ந்த வீரர்களும் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 8 வீரர்களும், புதுச்சேரியை சேர்ந்த ஒரு வீரரும் இதில் அடங்குவார்கள். தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக அஜய் தாக்கூர் இருப்பார்.

    கோப்பையை எந்த அணி வெல்லும் என்பதை கணிக்க முடியாது. 12 அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறை மகுடம் சூட கடும் போர் நடக்கும் என்று நினைக்கிறேன். நமது அணியின் குறைந்தபட்ச இலக்கு ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவதாகும். அதன் பிறகு ‘நாக்-அவுட்’ சுற்றில் களம் காணும் அணிகளுக்கு ஏற்ப எங்களது வியூகங்களை மாற்றி அமைத்து கோப்பையை வெல்ல போராடுவோம். எங்கள் அணியில் வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டம் பலமாகும். பலவீனம் என்று எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. திட்டத்தை களத்தில் செயல்படுத்தும் போது ஏற்படும் தோல்வியை தான் பலவீனமாக கருத முடியும்.

    தமிழ் தலைவாஸ் அணி கோவை மற்றும் கன்னியாகுமரி உள்பட நமது மாநிலத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உள்ளூர் அணிகளுடன் விளையாடி கபடியை மேலும் பிரபலப்படுத்துவதுடன், இந்த ஆட்டத்தை நோக்கி இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார். பாஸ்கரன் பயிற்சியின் கீழ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அறிமுக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×