search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கும்ப்ளேவிற்கு நேரடி தகுதி
    X

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கும்ப்ளேவிற்கு நேரடி தகுதி

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. அழைப்பு விடுத்துள்ளது. கும்ப்ளேவிற்கு நேரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும்.

    இவரது தலைமையில் இந்திய அணி கடந்த ஓராண்டுகளாக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்று, நான்கு போட்டிகளில் டிரா ஆனது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.

    அவரது தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காள தேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இவரது பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருப்பதால் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதில் அனில் கும்ப்ளேவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் நேரடியாக விண்ணப்பித்ததாக கருதப்படும்.



    கும்ப்ளேயின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடங்கள் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் பிசிசிஐ இந்த அழைப்பு விடுத்துள்ளதாக விஸ்டன் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    பிசிசிஐ-யில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக உச்சநீதிமன்றம் நான்கு பேர் கொண்ட நிர்வாகக்குழுவை நியமனம் செய்துள்ளது. இந்த குழுவின் தலைவராக வினோத் ராய் உள்ளார். பிசிசிஐ நிர்வாகிகளுக்கும், நிர்வாகக்குழுவிற்கும் இடையில் சுமுகமான நிலை இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் நிர்வாகக்குழுவுடன் கும்ப்ளே இணக்கமாக செயல்படுகிறார் என்ற செய்தி வெளியாகின.

    இதனால்தான் விண்ணப்பத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கும்ப்ளேவிற்குதான் தலைமை பயிற்சியாளருக்கான அதிகப்படியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    லஷ்மண், சச்சின் தெண்டுல்கர், கங்குலி தலைமையிலான குழு தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும்.
    Next Story
    ×