search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம்: ஜாகீர்கான் பேட்டி
    X

    எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம்: ஜாகீர்கான் பேட்டி

    ‘ஐ.பி.எல். போட்டி தொடரில் எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற முயற்சிப்போம்’ என்று குஜராத் அணியை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்ற பிறகு டெல்லி அணி கேப்டன் ஜாகீர்கான் தெரிவித்தார்.
    கான்பூர் :

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கான்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியை தோற்கடித்து 5-வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஆறுதல் கண்டது.

    ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும், தினேஷ் கார்த்திக் (40 ரன்கள், 28 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ஆரோன் பிஞ்ச் (69 ரன்கள், 39 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவை சமாளித்து நல்ல நிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

    பின்னர் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் (10 ரன்), ரிஷாப் பான்ட் (4 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், ஸ்ரேயாஸ் அய்யரின் (96 ரன்கள், 57 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன்) அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது.



    அந்த ஓவரை பாசில் தம்பி வீசினார். முதல் பந்தில் லெக்-பை வகையில் 2 ரன் வந்தது. அடுத்த பந்தில் ஸ்ரேயாஸ் அய்யர் போல்டு ஆனார். அடுத்த 2 பந்துகளையும் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பவுண்டரிக்கு விரட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த சீசனில் டெல்லி அணி 2-வது முறையாக குஜராத்தை வீழ்த்தியது.

    20 ஓவர் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு அவர் 86 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 2 சீசன்களையும் சேர்த்து இதுவரை 12 முறை முதலில் பேட்டிங் செய்த ஆட்டங்களில் குஜராத் அணி ஒரு முறை மட்டுமே வெற்றியை சுவைத்து இருக்கிறது. கடந்த ஆண்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இருந்தது. 13-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி 9-வது தோல்வியை சந்தித்து இருப்பதுடன் புள்ளி பட்டியலில் ஒரு இடம் பின்தங்கியது. சதத்தை மயிரிழையில் தவற விட்ட டெல்லி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    வெற்றிக்கு பிறகு டெல்லி அணி கேப்டன் ஜாகீர்கான் அளித்த பேட்டியில், ‘கடைசியில் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் வேகம் சற்று குறைய தான் செய்யும். ஆனால் நாங்கள் தொழில்முறை வீரர்கள். வாய்ப்பை இழந்த விஷயங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உயர்வான நிலையுடன் போட்டியை நிறைவு செய்ய விரும்புகிறோம். வெற்றி பெற வேண்டுமானால் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×