search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் கோட்பாட்டாளரான செர்கீ ஐசென்ஸ்டைனின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்
    X

    பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் கோட்பாட்டாளரான செர்கீ ஐசென்ஸ்டைனின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்

    மறைந்த சோவியத் ரஷிய திரைப்பட இயக்குனர் மற்றும் கோட்பாட்டாளரான செர்கீ ஐசென்ஸ்டைனின் 120-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது. #Googledoodle #SergeiEisenstein
    புதுடெல்லி:

    செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன், சோவியத் ரஷியாவின் திரைப்பட இயக்குனரும், திரைப்படக் கோட்பாட்டாளரும் ஆவார். இவர் 1898-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷியாவின் ஒரு அங்கமாக இருந்த லடிவியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தார். இவரது தந்தை மிக்கைல் ஒசிபோவிச் ஐசென்ஸ்டைன் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர், தாயார் ஜூலியா இவனோவ்னா ரஷியாவை சேர்ந்தவர்.



    செர்கீயின் தந்தை கட்டிட கலைஞர் ஆவார். தாயாரின் தந்தை மிகப்பெரிய வர்த்தகர் ஆவார். செர்கீ பெட்ரோகிராட் கட்டிட பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் பயின்றார். 1918-ம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ரஷிய புரட்சியில் இணைந்தார்.

    அதன்பின் 1920-ம் ஆண்டு மாஸ்கோ சென்ற அவர், புரோலெட்கல்ட் நிறுவனத்தில் இணைந்து திரைப்பட கல்வி பயின்றார். கேஸ் மாஸ்க்ஸ், லிசன் மாஸ்கோ, வைஸ்மேன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணியாற்றியுள்ளார். 1923-ம் ஆண்டு முதல் கதைகள் எழுத தொடங்கினார். அவரது முதல் திரைப்படம், குல்மோவ்ஸ் டைரி(Glumov's Diary). 1925-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்டிரைக் என்னும் படமே அவரது முதல் முழுநீள திரைப்படமாகும். அதன்பின் 1925-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்கள் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தன. இவை மூன்றும் பேசாப் படங்களாகும்.

    சரித்திரப் படங்களான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி, இவான் த டெரிபிள் போன்ற படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள், தொடக்ககாலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின.

    செர்கீ ஐசென்ஸ்டைன் பெற்றுள்ள விருதுகள்:

    1939: ஆர்டர் ஆப் லெனின் விருது (அலெக்சாண்டர் நெவ்ஸ்கி)
    1941: ஸ்டாலின் விருது (அலெக்சாண்டர் நெவ்ஸ்கி)
    1946: ஸ்டாலின் விருது (இவான் த டெரிபிள்)
    ஆர்டர் ஆப் த பேட்ஜ் ஆப் ஹானர் விருதும் வென்றுள்ளார்.

    செர்கீ ஐசென்ஸ்டைன், 1948 பிப்ரவரி 11-ம் தேதி தனது 50-வது வயதில் காலமானார். அவரை போற்றும் வகையில் அவரது 120-வது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #Googledoodle #SergeiEisenstein #tamilnews
    Next Story
    ×